சிறுநீரக பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவு செய்து டயாலிசிஸ் செய்து கொண்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் சிகிச்சை அளிக்க முடியாது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கைவிட்ட நிலையில், புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனை அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவாப் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ். 18 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.
ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஊர்மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணம் பெற்று, கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் செலவழித்து 62 முறை டயாலிசிஸ் செய்துள்ளார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு தங்களுடைய மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும் எனவே புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்பேரில் ராணியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேஷ்க்கு அங்கு பிரேத்யமாக டயாலிஸிஸ் கருவி வரவழைக்கப்பட்டு 10 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்த மகேஷ் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதுபற்றி மகேஷ் வில்லியம்ஸ் கூறும்போது: “ பொதுவாக அரசு மருத்துவக் கல்லூரி இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை நான் முதலில் நினைக்கவில்லை. நோய்த் தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு வரும்போது எனக்கு மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு வந்த உணர்வே ஏற்பட்டது. எனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு மிக்க நன்றி”என்று கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,“ இளைஞருக்கு 62 முறை தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து டயாலிசிஸ் செய்து வந்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பால் அவர்கள் இந்த இளைஞரை கைவிட்ட பின்னர்தான் அவர் எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார். இருப்பினும் உடனடியாக அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினோம். அவர் மட்டுமல்ல இங்கு வயது முதியவர்கள் உட்பட பச்சிளம் குழந்தைகளையும் நாங்கள் கொரோனாவில் இருந்து மீட்டுள்ளோம்” என்றார்.