தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களது பெற்றோர்களில் ஒன்பது பேருக்கு தற்போது தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டை பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவி ஒருவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து பள்ளியில் உள்ள 1079 மாணவிகள், 36 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 56 பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 1,729 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெற்றோர்கள் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா பரவலால் இரு வாரங்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.