காரைக்காலில் இரண்டு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என வெளியான வதந்தியையொட்டி மயிலாடுதுறை மாவட்ட எல்லையோரம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு கூட்டம் கூடியதால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தபட்ட ஊரடங்கில் கடந்த 8 ஆம் தேதி தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தையொட்டியுள்ள எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் அதிகளவு கூட்டம் கூடியதால், இரு மாநில காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி இரு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இந்தத் தகவல் பொய்யானது என கலால் துறை மறுப்பு வெளியிட்டது. இருப்பினும் காரைக்கால் குளக்குடி கிராமத்தில் உள்ள மதுக்கடைகளில், அருகில் மயிலாடுதுறையில் உள்ள மதுப்பிரியர்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மதுபானத்தை வாங்க நின்றது கொரோனா பரவும் அபாயத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து மதுப்பிரியர்களை முககவசம் அணியாமல் வந்தவர்களை வெளியேற்றியும், அவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினர். மேலும் அப்பகுதியில் தமிழகப்பகுதியில் இருந்து மதுப்பிரியர்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.