கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழி, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதுதான் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. 3லிருந்து 6 அடி வரை சமூக இடைவெளியை கடைபிடிக்கும்போது, இருமல், தும்மலினால் நோய்க்கிருமிகள் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என கூறுகின்றனர். அரசின் விதிமுறைகளுக்கு இணங்க கடைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என எங்கு சென்றாலும், சுண்ணாம்பு அல்லது மஞ்சள் வண்ண டேப்பால் குறிப்பிட்ட இடைவெளிகளில் வட்ட வடிவத்தில் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கமுடிகிறது. சில இடங்களில் வண்ண சாக்பீஸ்-களால் வட்டம் வரைந்து இருப்பார்கள்.
சமீபத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் வரைந்திருந்த வட்டங்களை புகைப்படம் எடுத்து அனாமிகா என்ற பெண் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதுடன், பலரின் கேலிக்கும் ஆளாகி உள்ளது.
காரணம், இந்த வட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் போடவேண்டும் என்ற பெயரில் நினைத்த இடங்களில் வரைந்திருக்கிறார்கள். அந்த வட்டங்களில் அதற்கேற்றவாறு ஒருவர் நின்று எடுத்தப் புகைப்படங்கள்தான் பார்த்தவுடன் சிரிக்கவைக்கிறது. கம்பங்களைச் சுற்றி, ரயில் நிலையத்தில் உள்ள பூத் வடிவிலான கடைகளை ஒட்டி, படிக்கெட்டுகளுக்கு அடியில் என ஆட்கள் நிற்கமுடியாத இடங்களிலும் வரைந்துள்ளனர்.
இந்தப் புகைப்படங்களை இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். பலர் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.