ஃபைசர் தடுப்பூசி ஒமைக்ரான் வகை கொரோனாவை 70 சதவிகிதம் கட்டுப்படுத்துவதாக தென்னாப்ரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு எதிராக சிறந்து செயல்படுவதாக தென்னாப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில், இரண்டு தவணை ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருந்த 70 சதவிகிதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு பாதிப்பை இந்த தடுப்பூசி தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 சதவிகிதம் தொற்றே ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது. தடுப்பூசி செயல்பாட்டில், வயது அடிப்படையில் சிறிது மாறுபாடு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதில், ஃபைசர் தடுப்பூசி பெரிதும் உதவும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.