கொரோனா முதல் அலையின் போது இருந்ததை விட 2ஆவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறும் போது, “ முதல் அலையின் போது 41.1% நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. அது 2ஆவது அலையின் போது இது 54.5% ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும் வென்டிலேட்டர்கள் தேவை முதல் அலையின் போது 37.3% ஆக இருந்தது. ஆனால் 2ஆவது அலையில் இது 27.7% ஆக குறைந்துள்ளது.” என்றார்.
முன்னதாக, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு அவற்றை வினியோகிப்பதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 9 வகையான தொழிற்சாலைகளில் மட்டுமே இனி ஆக்சிஜனை பயன்படுத்த அனுமதி அளித்து மற்ற தொழிற்சாலைகளுக்கு அதன் வினியோகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.