இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் ஒமைக்ரான் வகை கொரோனாவும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இதுவரை 202 பேர் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 54 பேரும், தெலங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், உ.பி.யில் 2 பேரும், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தில் தலா ஒருவரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒடிசா மாநிலத்தில் இன்று இருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலை அடுத்து, விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அது, தொண்டை வலி (Sore throat). ஒமைக்ரானால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- விக்னேஷ்முத்து