ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் பெற்றோர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதித்துவிடக் கூடாது என தங்களால் முடிந்ததை செய்துவருகின்றனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள உத்தரா பட்டேஸ்வர் கிராமத்தில் மசன் ககன் போய் (45) என்பவர் அவரது மனைவி ரீட்டாவுடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 13 வயதில் அர்ச்சிதா என்ற மகளும், 10 வயதில் பிஸ்வராஜன் என்ற மகனும் இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதமாக வருமானம் எதுவும் இல்லை. பள்ளி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய நிலையில், தங்களிடம் செல்போன் இல்லாத காரணத்தால் படிக்கமுடியவில்லை என அவர்களது மகள் பெற்றோரிடம் பேசாமல் இருந்திருக்கிறாள்.
எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் யாரிடமும் சென்று கடன் வாங்க முடியவில்லை. இந்த நிலையில் ரீட்டா தனது தாயார் தன் திருமணத்தின்போது அன்பளிப்பாகக் கொடுத்த தனது தங்கக் காதணியை விற்று செல்போன வாங்க முடிவெடுத்தார். அதன்படி அங்கிருந்த ஒரு பொற்கொல்லரிடம் காதணியை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ’’அந்த காதணி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் மகளின் திருமணத்தின்போது அதை அன்பளிப்பாக கொடுக்கும்படி என் அம்மா என்னிடம் கூறினார். ஆனால் அர்ச்சிதாவின் படிப்புக்கு முன்னால் வேறு எதுவும் முக்கியமில்லை. எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு அரசாங்கம் தரும் 20 கிலோ அரிசியை மட்டும் வைத்துதான் பிழைப்பு நடத்தி வருகிறோம். பணம் இல்லாததால் எங்கள் குடிசையைக் கூட சரிசெய்ய முடியவில்லை.
வேறு வழியே இல்லாமல்தான் அந்த காதணியை வெறும் 8 ஆயிரத்துக்கு விற்றுள்ளோம். இப்போது அதன் மதிப்பு 15 ஆயிரம் இருக்கும். அவசரமாக பணம் தேவைப்பட்டதால் விற்றுவிட்டோம். இப்போது என் மகள் மகிழ்ச்சியாக ஆன்லைன் வகுப்புகளை பார்க்கிறாள்’’ என்கின்றனர்.
இதேபோல் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர தாஸ் என்பவர் தன் 15 வயது மகள் படிப்புக்காக தங்களிடம் இருந்த பசுவை விற்று செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். பால் வியாபாரம் செய்யும் அவருக்கு ஆதாரமாக இருந்த இரண்டு பசுக்களில் ஒரு ஜெர்ஸி பசுவை வெறும் 15 ஆயிரத்திற்கு விற்று 12 ஆயிரத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். பொதுவாக ஜெர்ஸி பசுக்கள் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செல்லும். ஆனால் இந்த ஊரடங்கில் அவசரத் தேவைக்காக வெறும் 15 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். அவரது மகள் படித்து ஆசிரியராக வேண்டும் என்று விரும்புவதால், அதற்கு தங்கள் வறுமை ஒரு தடை ஆகிவிடக்கூடாது என இப்படியொரு முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.