மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகம் 60 விழுக்காடு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு ஜூன் 21-ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. ஆனால் இந்த கொள்கை அறிமுகமான பின்னர் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 21ஆம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அறிமுகமானது அன்று தொடங்கி ஜூன் 27 வரை 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதுவே ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரை வெறும் 2 கோடியே 30 லட்சமாக குறைந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால் நடப்பாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியாது என்கின்றனர் வல்லுனர்கள். ஏனெனில் நாளொன்றுக்கு 80 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் தான் இந்த இலக்கை எட்ட முடியும்.
ஆனால் தேவையான அளவு தடுப்பூசி உற்பத்தி செய்யாததால் அது கேள்விக்குறிதான் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு தங்களுக்கு 10 கோடி தடுப்பூசி வேண்டும் என்றும், மகாராஷ்டிரா அரசு அடுத்த மூன்று மாதங்களில் 9 கோடி தடுப்பூசி வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் தடுப்பூசி கைவசமில்லை என தொடர்ந்து கூறி வருகின்றன.