கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகர பயணத்தை நேபாள அரசு தடை செய்துள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுற்றுலா வருவாய் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 30 வரை நேபாளத்தில் சுற்றுலா விசாக்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செயலாளர் நாராயண் பிரசாத் பிதாரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் எவரெஸ்ட் சிகரத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை இன்று நடத்தினார். கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று பரவிய சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் வராததால் இந்தியாவில் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாகனம் மற்றும் மொபைல் உற்பத்தி, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டினர் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, விமான சேவைத் துறையும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.