கேரளாவில் 192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தளர்வையடுத்து கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களின் சந்தேகங்களை நேரடியாக கேட்டு தீர்த்துக்கொள்ளலாம் என அறிவுத்தப்பட்டது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்ற இடத்திற்கு அருகே உள்ள மாறஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 149 மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட 39 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதேபோல் இப்பள்ளியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அந்த பள்ளியிலும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 43 மாணவர்களுக்கும், 33 ஆசிரியர்களுக்கும் நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த இரு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இப்போது அனைத்து அதிகாரிகளுடனும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.