மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் - ஆட்சியர்

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் - ஆட்சியர்
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் - ஆட்சியர்
Published on

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உடல்நிலை சீராக உள்ளது எனவும், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் தொடர்புகளை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலியாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு மதுரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும், மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துப் பேசினார்.

அப்போது அவர், “மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உடல்நிலை சீராக உள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில், தற்போது சீராக உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மதுரையில் பாதிக்கப்பட்ட நபரின் தொடர்புகளை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். மேலும், அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அத்திருமணத்தில் 60% நபர்கள் கலந்துகொண்டுள்ளனர். அது குறித்தும் முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். மதுரையில் பாதிக்கப்பட்ட 54 வயது நபரின் மகன் மற்றும் மனைவி தனிவார்டில் வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர்.

அவர் தொழுகை செய்ததாகக் கூறப்படும் பள்ளிவாசலும் முழு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது. மதுரையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பம், உறவினர்கள், அவர் சந்தித்த நபர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் பெற்றுள்ளோம். அவர்களுக்கும் பரிசோதனை செய்ய உள்ளோம். மதுரை மாவட்ட நிர்வாகம் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மதுரையில் பாதிக்கப்பட்ட நபருக்கு வெளிநாட்டுத் தொடர்பு இல்லை. அவர் குடியிருந்த வீடு மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களுக்கு சானிடைசர் கை சுத்திகரிப்பான் மூலம் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் கொரோனா பாதித்த நபருடன் 60 பேர் தொடர்பிலிருந்துள்ளனர். அவர்களுடைய உடல்நலத்தையும் ஆய்வு செய்ய உள்ளோம். மதுரைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 439 பேரைக் கண்காணிக்க வருவாய் அலுவலர், சுகாதார அலுவலர், காவல் ஆய்வாளர் இக்குழு மூலம் கண்காணிக்கப்படுவர். 7 பேர் கொரானா அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த நபர்கள் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சென்னை தேனிக்கு இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவுப்படி மதுரையில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.

மாலையிலிருந்து 144 தடை உத்தரவு வரப்போகிறது என்பதைப் பார்த்துப் பயந்தே கூட்டமாகக் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகளில் கூடுகின்றனர். மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும். மதுரையில் விமானநிலைய சேவை எதுவும் இல்லை. மதுரையில் 144 தடை உத்தரவால் சாலையோர வியாபாரம் எதுவும் நடக்காது. மதுரையில் கொரோனா பாதித்த நபர்கள் குறித்து தவறான தகவல்கள் அனுப்புவார்களைக் கண்காணிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com