நடிகர் விவேக மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், ’’உலகம் முழுவதும் கொரோனா தொற்றிக்கு தீர்வு தடுப்பூசிதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால்தான் மரணம் அடைந்தார் என்கிற தகவல் பரவிய பின்னர் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது என்பது உண்மை. தமிழக முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாகவும், முகாம்கள் நடத்தியதாலும் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனித சமுதாயத்தை வாழ்விக்கும் தடுப்பூசி விஷயத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். விவேக் மரணம் தடுப்பூசியால் நடைபெறவில்லை என மாநில சுகாதார துறை விளக்கம் கொடுத்தது, தற்போது மத்திய குழு கூறியிருப்பதன் மூலம் தடுப்பூசியால் விவேக் மரணம் ஏற்பட வில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தடுப்பூசி செலுத்தியவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது, மது அருந்தக்கூடாது என்கிற வதந்தி கருத்தாக பரவியதால்தான், ஞாயிற்றுக்கிழமை முகாமை சனிக்கிழமை மாற்றியுள்ளோம். மருத்துவரீதியில் இவை உண்மை அல்ல. அசைவம் சாப்பிடக்கூடாது என எந்த மருத்துவ ஆய்வும் தெரிவிக்கவில்லை.
மொத்தம் 11.5 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும், தற்போது வரை 5.8 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம். நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 70% தாண்டவேண்டும் என இலக்கு வைத்துள்ளோம். இரண்டாவது டோஸ் 30% அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 70% தாண்டும்போது, நோய் தடுப்பாற்றல் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்தடுத்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவது விரைவு படுத்தப்படும்’’ என்று கூறினார்.