தமிழகத்தில் கொரோனா 4ஆவது அலை வராமல் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் 26ஆவது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். கடலூர், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 50 லட்சத்து 61ஆயிரத்து 287 பேருக்கு முதல் தவணையும், ஒரு கோடியே 34 லட்சத்து 97ஆயிரத்து 690 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்திலுள்ள 22 லட்சம் தகுதியான சிறார்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதை கடந்த 92 புள்ளி 10% பேருக்கு முதல் தவணையும், 75 புள்ளி 50 சதவீதம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.