கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதனால் பல்வேறு மாநிலங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காண முடிகிறது. சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்கள் ஊரடங்கு உத்தரவால் மயான அமைதியைத் தொட்டுள்ளது.
கேரளாவின் முக்கிய நகரமான கோழிக்கோடும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரங்களில் ஒன்று. ஆனால், இந்த ஊரடங்கு கோழிக்கோடு நகரையும் அமைதியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 743 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களை விடக் கேரளாவில் ஊரடங்கு உத்தரவு மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கால் மக்கள் எல்லாம் வீட்டிலேயே தங்கிவிட மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இருக்கும் அரிய வகை உயிரினங்கள் எல்லாம் நகரத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆம் இந்தியாவில் அழிவின் விளம்பில் இருக்கும் "புனுகுப்பூனை" என்ற விலங்கு கோழிக்கோட்டில் ஆள் இல்லா சாலையை அமைதியாகக் கடந்து சென்றுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா "இப்போது புனுகுப்பூனைகளின் நேரம், மிக அழகாக கோழிக்கோடு சாலையைக் கடந்து செல்கிறது. இந்தப் பூனை இனம் அழியும் விளிம்பில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் இவை மொத்தமே 250தான் இருக்கிறது. 1990-க்கு பின்பு கோழிக்கோடு பகுதியினர் புனுகுப்பூனையை நேரில் பார்த்ததில்லை, மனிதர்கள் சாலையில் இல்லாததால் இப்போது இவை வெளியே வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.