கேரளாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் திரிபுவகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எர்ணாக்குளத்தை பூர்விகமாக கொண்ட அந்நபர், பிரிட்டனிலிருந்து கேரளாவின் கொச்சிக்கு திரும்பியிருந்தவர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். ஒமைக்ரான் உறுதியாகியிருக்கும் இந்நபர், கடந்த 6ம் தேதி பிரிட்டனிலிருந்து கொச்சி வந்திருந்ததாகவும், இடையில் துபாயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்விஷயம் குறித்து பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “கொச்சி வந்து தரையிரங்கிய இரண்டாவது நாளே அவருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இவருக்கு மட்டுமன்றி, இவருடைய மனைவி மற்றும் தாய்க்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இருப்பினும் அது ஒமைக்ரான் என உறுதிசெய்யப்படவில்லை. அவர்கள் தற்போது வீட்டுத்தனிமையில் உள்ளனர்.
தற்போது அந்த நோயாளியின் உடல் சீராகவே உள்ளது. இவருடன் விமானத்தில் மொத்தம் 149 பேர் பயணித்திருப்பதால், அவர்களை அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம். அதைநோக்கி தற்போது செயல்படுகின்றோம். இப்போதைக்கு இதுகுறித்து அவசர நிலை ஏதும் ஏற்படவில்லை. ஆகவே அச்சம் வேண்டாம்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் ஆந்திராவிலும் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆந்திராவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி