கேரளாவில் 3,000-க்கும் குறைவானது தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

கேரளாவில் 3,000-க்கும் குறைவானது தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை
கேரளாவில் 3,000-க்கும் குறைவானது தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை
Published on

கேரளாவில் கொரோனா தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாதிப்பு படிப்படியாக குறைவதால், பொதுமக்கள் ஆறுதல் அடைந்துவருகின்றனர். இருப்பினும் ஒமைக்ரான் தொற்றுக்கான அச்சம் உள்ளதால், அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தினசரி 4,000-த்துக்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில், இன்று தினசரி தொற்று 3,000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கேரளாவில் கடந்த 2020 ஆண்டு ஓணம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட தளர்கவுகள், அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தல், தங்க கடத்தல் தொடர்பான இடைவிடாத போராட்டங்கள் ஆகியவற்றால் 2020 தொடங்கி 2021ம் ஆண்டு மே மாதம் வரையில் தினசரி தொற்று பாதிப்பானது 41,000-ஐ ஒட்டியே பதிவாகி வந்தது. இதற்குப்பின்னும் சட்டமன்ற தேர்தல் நடந்ததால், அதற்கு பிந்தைய நான்கு மாதங்களின்போதும் கொரோனா தொற்று குறையவே இல்லை. பின்னர் ஒருவழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20,000-க்கும் கீழே குறைந்து, இறுதியில் 13,000 வரை குறைந்து தினசரி தொற்று பதிவானது.

இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டதால் அங்கு மீண்டும் தொற்றுப்பரவல் அதிகமானது. இந்நிலையில் தற்போது இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தினமும் தொற்றுப்பதிவு ஆயிரக்கணக்கில் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தினசரி நோய் தொற்று 5,000 என பதிவாகி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 4,000 கீழ் பதிவாகி வருகிறது.

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 57,121 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 3,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக சனிக்கிழமை தினசரி தொற்று 3,795 என்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 3,972 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. இன்று (திங்கள்கிழமை) தினசரி நோய்த்தொற்று 2,434 என மூவாயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று, கேரள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

தற்போது வரை கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,97,039 என்றுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரு நாளில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,967 என பதிவாகியுள்ளது. தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 38,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 4,308 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை அம்மாநிலத்தில் 51,16,928 பேர் குணமடைந்துள்ளனர்.

கடுமையான விதிமுறைகளாலும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளாலும், தடுப்பூசி செலுத்துவதில் 97 சதவீதம் கடந்ததாலும் கேரளாவில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடம் அச்சம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com