"கேரளா மாடல் தோல்வி அல்ல" - கொரோனா பாதிப்பு விமர்சனங்களுக்கு வீணா ஜார்ஜ் விளக்கம்

"கேரளா மாடல் தோல்வி அல்ல" - கொரோனா பாதிப்பு விமர்சனங்களுக்கு வீணா ஜார்ஜ் விளக்கம்
"கேரளா மாடல் தோல்வி அல்ல" - கொரோனா பாதிப்பு விமர்சனங்களுக்கு வீணா ஜார்ஜ் விளக்கம்
Published on

தொடர்ந்து குறையாத கொரோனா பாதிப்புகளால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

மற்ற மாநிலங்களில் இரண்டாம் அலையின் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. நேற்று மட்டும் கேரளாவில் 12,220 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதேபோல் 97 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து கேரள அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ''கொரோனா பாதிப்புகளை குறைக்கும் வகையில், கேரளாவில், நாங்கள் ஒரு செயல்முறையை உருவாக்கியுள்ளோம். எங்களின் இந்த மாடல் வெற்றிகரமாக உள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

முதல் அலையில் இருந்து இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம். எங்கள் மாநிலத்தில் இதுவரை ஆக்சிஜன் இல்லாமல் அல்லது மருத்துவமனை படுக்கை கிடைக்காமல் மக்கள் இறக்கவில்லை. எங்கள் மருத்துவக் கட்டமைப்பு வெற்றிகரமாக உள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எனவே 'கேரள மாடல்' தோல்வி அடையவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் பாதிப்புகள் குறையும் என்று நம்புகிறோம்.

கேரள அரசு அதிக எண்ணிக்கையிலான கொரோனா சோதனைகளை நடத்துகிறது. சோதனையில் ஒரு நபருக்கு பாசிட்டிவ் என அறியப்பட்டால், அவருடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டுபிடித்து சோதனை செய்கிறோம். முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொடர்புகள் வரை பரிசோதனை செய்கிறோம். அதேபோல், பாதிப்பு அதிகமாக இருந்து ட்ரிபிள் லாக் டவுன் விதிக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா சோதனையை 10 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் உள்ளனர்.

கொரோனா தடுப்பில் நாங்கள் செயல்படுத்திய முறைகளுக்கும், எடுத்த முடிவுகளுக்கும் மத்திய குழு திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், எங்களின் தடுப்பூசி செயல்முறயையும் மற்றும் நோயைக் கட்டுப்படுத்த நாங்கள் எடுத்த அனைத்து முடிவுகளையும் அவர்கள் பாராட்டியும் உள்ளனர். என்றாலும், கேரளத்திற்கு அதிக தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதி எங்கள் மாநிலத்தில் உள்ளது. ஆனால் எங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com