மருத்துவமனையில் எனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும் , ஒரு ஆரஞ்சு பழமும் மட்டுமே கொடுத்தனர் என்று கொரோனா பாதிப்பு காரணமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்த பாலிவுட் பாடகி கனிகா மீது அலட்சியமாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது லக்னோ காவல்துறை. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து பிரபலங்களுக்கு விருந்தும் கொடுத்துள்ளார். இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் பீதியடைந்துள்ளது.
இப்போது லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கனிகா கபூர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ்க்கு கனிகா கபூர் பேட்டியளித்துள்ளார் "காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார்கள். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும் ஒரு ஆரஞ்சையும் கொடுத்தார்கள். நான் மிகவும் பசியாக இருந்தேன், எனக்கு மருந்துகளும் கொடுக்கப்படவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த கனிகா "எனக்கு ஜூரம் இருப்பதாக கூறினேன், ஆனால் யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை. நான் கொண்டு வந்த உணவைக் கூட கொண்டு சென்றுவிட்டார்கள். என்னால் எதையும் சாப்பிட முடியவில்லை, சில உணவுகள் எனக்கு அலர்ஜி தரக் கூடியவை. எனக்கே பசி தாகம் எல்லாம் இருக்கிறது, இங்கு இருப்பது கொடூரமாக இருக்கிறது. டாக்டரிடம் நான் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை சுத்தம் செய்யுமாறு கூறினேன், அதற்கு அவர் "இது ஒன்றும் ஐந்து நடசத்திர விடுதி அல்ல" என்றார். என்னை மிரட்டுகிறார்கள்" என்றார்.
மருத்துவமனையில் நிலை குறித்து தெரிவித்த அவர் "இந்த மருத்துவமனையின் அறை அழுக்காக இருக்கிறது, கொசுக்கள் கடிக்கிறது. எனக்கு இங்கு சரியான சிகிச்சை கொடுக்கவில்லை, எனக்கு இங்கு இருப்பது சிறையில் இருப்பது போல இருக்கிறது. என்னை ஒரு குற்றவாளி போல நடத்துகிறார்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை" என குமுறியுள்ளார் கனிகா கபூர்.