அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்க, மத்திய அரசு இன்று (ஆக.7) அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக அந்நிறுவனம் மத்திய அரசுக்கு நேற்று முன்தினம்(ஆக.5) விண்ணப்பம் அளித்திருந்தது. விண்ணப்பித்திருப்பதை, நேற்று அந்நிறுவனம் உறுதி செய்தது. இந்த விண்ணப்பத்தை ஏற்று, அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. அனுமதியை தொடர்ந்து, விரைவில் இத்தடுப்பூசி இந்தியாவுக்கு பயன்பாட்டுக்கு வருமென சொல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் தகவல் பகிர்ந்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், “இந்தியாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்ந்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு, இந்தியாவில் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய மக்களுக்கான தடுப்பூசி விநியோகம் இனி வேகமெடுக்கும்” எனக்கூறியுள்ளார்.
இந்தியாவில் இப்போதைக்கு கோவிஷீல்டு - கோவேக்சின் - ஸ்புட்னிக் வி - மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இறக்குமதி சார்ந்த சிக்கல்களால், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அதிகளவில் விநியோகிக்கப்படாமல் இருக்கிறது. ஜான்சன் & ஜான்சனுக்கு அப்படியான சூழல் ஏற்படுமா, அல்லது இது விரைந்து அதிகளவில் விநியோகிக்கப்படுமா என்பது வரும் நாட்களிலேயே தெரியவரும்.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி கோவிஷீல்ட் - கோவேக்சின் போல இரு டோஸாக இல்லாமல், ஒரே டோஸாக போட்டுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசியாகும். அந்த வகையில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் முதல் ‘ஒரு டோஸ்’ கொண்ட தடுப்பூசியாக இது இருக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளில் எளிதில் ஒப்புதல் கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு இந்திய அரசும் எளிதில் அனுமதி வழங்கப்பட்டு வரும் நடைமுறை இருந்துவருகிறது.
ஜான்சன் & ஜான்சன் மட்டுமன்றி, நோவாவாக்ஸ் தடுப்பூசியும் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளது. இருப்பினும் அதற்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் ஏதும் வழங்காமல் உள்ளது.