இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒரு வாரத்தில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியை ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனை முடிவுகளை ஜைடஸ் கேடிலா நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இம்முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் இத்தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் எனத் தெரிகிறது. அவ்வாறு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரக்கூடும்.
12 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஜைடஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 தவணைகளாக செலுத்த வேண்டியிருக்கும். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலை ஏற்படும்.