கொரோனா பீதியில் இப்படியா செய்வது... இண்டிகோ விமான பணிப்பெண்ணிற்கு நேர்ந்த அவலம்..!

கொரோனா பீதியில் இப்படியா செய்வது... இண்டிகோ விமான பணிப்பெண்ணிற்கு நேர்ந்த அவலம்..!
கொரோனா பீதியில் இப்படியா செய்வது... இண்டிகோ விமான பணிப்பெண்ணிற்கு நேர்ந்த அவலம்..!
Published on

இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என நினைத்து அதில் பணியாற்றும் பெண் ஒருவரை அக்கம்பக்கத்தினரே கடுமையாக அலைக்கழித்த சம்பவம் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

மேலும், கொரோனா குறித்த அச்சம் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த அச்சம் நாம் அன்றாடம் பழகியவரிடமிருந்து விலகி இருக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது. கொல்கத்தா நகரில் வசிப்பவர் அம்ரிதா சாஹா. இவர் இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வருகிறார். இவர் விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அம்ரிதாவின் அக்கம்பக்கத்தினர் இவருக்கும், இவரது தாயாருக்கும் கொரோனா தொற்று இருக்கும் என அஞ்சுவதால் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்தனர். இதற்கடுத்து மறுநாளான திங்கள்கிழமை அம்ரிதாவின் தாயார் மளிகை பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு மளிகைப் பொருள் கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தினர் அம்ரிதாவின் தாயாரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையெல்லாம் அறியாத அம்ரிதா தனது பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது ஏராளமானோர் அம்ரிதாவின் வீடு முன்பு கூடி, அவரை வீட்டை காலி செய்யுமாறு கோஷமிட்டுள்ளனர். தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸை கேட்டுள்ளார். ஆனால் அம்ரிதாவுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து கொல்கத்தா போலீஸ் அம்ரிதாவின் வீட்டுக்கு விரைந்து, தங்களால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறினர். மேலும் அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொல்கத்தாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மேற்கு வங்கம் முழுவதும் கொரோனா குறித்த அச்சம் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com