கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 பேர் கொரோனாவால் பாதிப்பு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விடவும் இன்று சற்று குறைந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 928 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,25,11,701 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,966 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 11,860 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.76 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 16,89,995 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,86,72,15,865 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை துணை நிலை ஆளுநர் அனில்பைஜால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்திய செய்தி: விஜய்யின் 'பீஸ்ட்' வசூல் ரூ.100 கோடியை நெருங்குகிறதா?