தமிழ்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1,942 என்று பதிவாகியிருந்த நிலையில், இன்று எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாதிப்பு உறுதியானவர்களில், 2 பேர் மட்டுமே வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்குட்பட்ட 100 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதாகவும் மொத்தம் 1,59,564 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 1,933 மட்டுமே கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான விவரத்தை பொறுத்தவரை, சென்னையில் மேலும் 211 பேருக்கும்; கோவையில் 236 பேருக்கும்; ஈரோட்டில் 177 பேருக்கும்; செங்கல்பட்டில் 108 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை இல்லாமல், சேலம் - தஞ்சை - திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 பேர் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,462 என உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 34 பேரில், அரசு மருத்துவமனையில் 22 பேரும் தனியார் மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து வீடுதிரும்பியவர்கள், 1,887 என்றும், இதன்முலம் இதுவரை கொரோனாவிலிருந்து 25,30,096 பேர் குணமடைந்திருப்பதற்காகவும் தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,411 என்றாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.