“இயற்கையாக ஹெர்டு இம்யூனிட்டியால் நோய்எதிர்ப்பு சக்தியா? அது முட்டாள்தனமானது”-WHO விஞ்ஞானி
கொரோனாவுக்கு எதிராக போராட இயற்கையான தொற்று மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவது முட்டாள்தனமானது. ஏனெனில் அதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில், ''பிஏ2 வைரஸ் பிஏ1 வைரஸை மாற்றி அமைக்கும். பிஏ2 வெகு சீக்கிரமாக பரவும் தன்மையைக் கொண்டது. அதே சமயம் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்த அளவுதான் இருந்தது.
2019ல் தென்பட்ட கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாறிக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய டெல்டா வைரஸ் வந்தது, அதற்கடுத்து ஒமைக்ரான் வந்தது. தற்போது ஒமிக்ரானின் வேரியண்ட்கள் வந்திருக்கின்றன. பிஏ1,2,3 என மூன்று வேரியண்ட்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த மூன்றில் பிஏ2 மற்ற இரண்டை விடவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேசமயம் அதிக நாடுகளில் பரவி வருகிறது.
டெல்டா வைரஸை விட குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பாதிப்புகள் இருக்கவே செய்யும். ஒமைக்ரான் திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்ததில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இதன் பாதிப்புகள் குறைவாகவே இருந்திருக்கிறது. தடுப்பூசி நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் உருமாறும் போதும், அதன் தன்மைகளும் மாறிக்கொண்டிருக்கும். ஒமைக்ரான் திரிபுகளில் இந்த பிஏ.2 மட்டும் பரிசோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறது. இதனால் கண்டறிவதில் சிரமம் இருக்கிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள், ஒமைக்ரானின் புது திரிபால் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்ததில், அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எப்படி டெல்டா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்ததோ, அதேபோல் இப்போதும் ஒமைக்ரானுக்கு எதிராகவும் ஒமைக்ரான் திரிபுகளுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் கண்டிப்பாக வேலை செய்கின்றன'' என விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார்.