கொரோனா வைரஸை பொருத்தவரை மீண்டும் தாக்குதல் என்பது புறக்கணிக்க முடியாத ஒன்று என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். எனவே கொரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்டு இருந்தாலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என எச்சரிக்கின்றனர்.
ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வெகு தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொற்று பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மகாராஷ்டிரா கொரோனா தடுப்புக்குழு மருத்துவரான டாக்டர் ஷாஷாங்க் ஜோஷி கூறுகையில், சமீபத்தில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர்களாக இருந்தாலும் மாஸ்க் அணியாமல் எங்கும் செல்லக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார். கொரோனாவின் அனைத்து வகைகளிலுமே மீண்டும் தொற்று என்பதை நம் யாராலும் தடுக்கமுடியாது என்கிறார் அவர்.
மற்றொரு நிபுணர் டாக்டர் ராகுல் பண்டிட் கூறுகையில், இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக பதிவாகவில்லை. இருப்பினும் மற்ற கொரோனா வகைகளைப்போல் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியை கடைபிடித்தலும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்கிறார் அவர்.