தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஊரடங்கு நேரத்தில், என்னென்ன செயல்பாடுகளெல்லாம் இருக்கலாம் - இருக்கக்கூடாது, கட்டுப்பாடுகளுடன் எவையெல்லாம் செயல்படலாம் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இதில், பள்ளி கல்லூரிகள் செயல்பாடுகள் குறித்த சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அப்படி பள்ளிகள் குறித்து வெளியான இன்று அறிவிப்பு விவரங்கள் மற்றும் அதன் பின்னணியை இங்கே காணலாம்.
பள்ளி செயல்பாடு குறித்த அறிவிப்புகள்:
இதில் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில், அவர்களுக்கான தடுப்பூசி விநியோக தொடக்கம் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்ரமணியினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “பள்ளிக்கல்வித்துறையுடன் மருத்துவத்துறை இணைந்து 10 – 12 வகுப்பு மாணவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழத்தில் சுமார் 33,46,000 சிறார்கள் தடுப்பூசியை பெறும் தகுதியை பெற்றுள்ளனர். பள்ளி நிர்வாகங்கள் வழியாக, இவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. விரைவில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இன்னும் சில வாரங்களில், தடுப்பூசி போட தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். மாணவர்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது. அதேபோல பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அரசின் இன்றைய ஊரடங்கு குறித்த அறிவிப்புகளுடன், திங்கள் முதல் சனி வரையில் பகல் நேரத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் ஆகியவையும் வெளிவந்துள்ளன. அதுகுறித்த விவரங்களை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்.
பள்ளிகள் இயக்கத்துக்கான அறிவிப்புகள் குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார் பேசுகையில், “1-9 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அறிவித்துள்ளது. அது எங்கள் தரப்பில் சற்று கடினமான முடிவாகவே தெரிகிறது. இருந்தாலும், மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அரசின் முடிவுகளை நாங்கள் மனதார ஏற்கிறோம். பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் முழுமுதல் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு 10,11,12-ம் வகுப்பு சிறார்களுக்கு தடுப்பூசி வந்துவிட்டதால், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு பொதுத்தேர்வில் எவ்வித சமரசமும் செய்யப்படக்கூடாது. அரசு அப்படியான முடிவுகளை இனி வரும் நாள்களில் எடுக்காது என நம்புகிறோம்.
சில தனியார் பள்ளிகள், பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்துள்ளது. அவற்றை கண்டறிந்து அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உதவ வேண்டுமென, எங்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பள்ளி வாகனங்களை புதுப்பித்தல் தொடங்கி கட்டிடங்களை புதுப்பிப்பது வரை பல தனியார் பள்ளிகள் நிறைய வேலைகளை செய்துள்ளது. இப்போது அவையனைத்தும் வீண் என்ற நிலை உள்ளது. இதனால் அப்பள்ளிகள் மேலும் நலிவடைந்திருக்கும். ஆகவே அரசு அவர்களை கணக்கில் கொண்டு உதவ வேண்டும். மேலும், கடந்த சில மாதங்களாக தனியார் பள்ளிகளுக்கு நிறைய வரி விதிக்கப்படுகிறது. இது அப்பள்ளிகளுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும். எனவே தனியார் பள்ளிகளின் நிலையை உணர்ந்து, அரசு வரி விலக்கு செய்ய வேண்டும். குறைந்தபட்சம், வட்டியில்லா கடனாவது தனியார் பள்ளிகளுக்கு அரசு தர வேண்டும்.
தனியார் பள்ளிகளில் விடுமுறை அளிப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. இப்படியான போக்கைவிட்டுவிட்டு, அரசு எங்களையும் வழிநடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அரசுப்பள்ளிகளுக்கும், அரசு உதவ வேண்டும்” என்று கூறினார்.