ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், குறைந்தபட்சம் ஒருவராவது உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமைக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார்.
எனக்கு தெரிந்து, இந்த ஒமைக்ரான் பாதிப்பு லேசான பதிப்பு என்றே நான் நினைக்கிறேன். இருப்பினும் இது வேகமாக பரவும் தன்மையுடன் உள்ளது என்பதையும் நாம் காண வேண்டும். இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில், நேற்று ஒருநாளிலேயே 1,239 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை பன்மடங்காகி வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3,137 பேர் பிரிட்டனில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ஒவ்வொரு நாளும் கொரோனா உறுதியாகும் நபர்களில், 40% பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தரவுகள் சொல்கின்றன. கிறிஸ்துமஸ் நெருங்குவதால், கூட்டங்கள் அதிகம் கூடும் வாய்ப்புள்ளதால் வரும் நாள்களில் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பூஸ்டர் டோஸ் முன்பதிவு பிரிட்டனில் வரும் புதன்கிழமை (நாளை மறுநாள்) தொடங்குகிறது. இரு டோஸ் தடுப்பூசி பெற்று, மூன்று மாதம் ஆனவர்களுக்கு, இந்த பூஸ்டர் டோஸ் தரப்படும் என பிரதமர் ஜான்சன் அறிவித்துள்ளார்.
தகவல் உறுதுணை: SkyNews