சென்னை மாநகர பேருந்துகள் மீண்டும் இயங்கினாலும், பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். நிறைய பேருந்துகளில் வசூல் மிகவும் குறைவாகவே இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சாதாரண நாட்களில் நகரின் முக்கிய பகுதிகளில் செல்லும் பேருந்துகளில் குறைந்தது 5000 ரூபாய் வசூல் இருக்கும். ஆனால் தற்போது 1000 ரூபாயாகக் குறைந்துள்ளது. மொத்த வசூல் 3 கோடி வரை இருந்தது. தற்போது 1 கோடியாக குறைந்துள்ளது. இந்த வருமானம் டீசல் செலவுக்கே போதாது என அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநகரில் மொத்தம் 3,234 பேருந்துகள் இயங்கி வந்தது. தற்போது 2,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 1200 பேருந்துகள் முழுநேரமாகவும், மற்ற பேருந்துகள் இரண்டு பகுதியாகவும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் 60 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அதில் 50% பேருந்துகள் 5 வருட பழைமையானவை. அவற்றுக்கு புதுப் பேருந்துகளைவிட அதிக எரிபொருள் தேவைப்படும்.
சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வேலைக்கு வருபவர்கள் மாநகரப் பேருந்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி செல்லும் பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. தொற்றுநோய்க்கு முன்பு இவர்களில் பெரும்பாலானோர் ரயில் வசதியைப் பயன்படுத்தி வந்தனர். பேருந்துகளைவிட ரயில்களில் டிக்கெட் செலவு மிகக்குறைவாக இருந்ததுதான் இதற்குக்காரணம் என்கிறார் அவர்.