கொரோனா காரணமாக குழந்தைகளிடம் பயம், பதற்றம் அதிகரித்திருப்பதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிப்பதால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையால் நாடே நோய்பரவல் அச்சத்தில் இருக்கிறது. முதல் அலையின்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளை அதிகளவில் தொற்று தாக்காமல் இருந்தது சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் இரண்டாம் கொரோனா அலை பரவலால் இளம்வயதினர் மட்டுமல்லாது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் தினசரி சராசரியாக 500 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்படுகிறது. இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 8 வயது மகனின் அச்சம் குறித்தும், நடவடிக்கைகளில் மாற்றம் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. தனது மகன் நாள் முழுதும் வீட்டில் உள்ள பொருட்களை முகர்ந்து பார்த்து தனக்கு நுகரும் தன்மை இருக்கிறதா இல்லையா என பரிசோதித்துக் கொள்வதாகவும், வெயில் காரணமாக உடல் வெப்பம் அதிகரித்து உடல் சோர்வு ஏற்பட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்குமோ என கேட்பதாகவும் அந்தத் தாய் வேதனை தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பல பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மனநிலை மாற்றம் குறித்து வினவத் தொடங்கியுள்ளனர். குழந்தைகள் வெளியில் செல்ல அச்சம் தெரிவிப்பதாகவும், நண்பர்களுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பது குறித்து பேசுவதாகவும், பெற்றோரின்றி குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்புவதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். அதன்படி குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையுடையவர்கள் என்பதால் அவர்களிடம் கூறாவிட்டாலும் பெற்றோரைக் கண்டு அவர்களும் அச்சப்படுவார்கள் என கூறுகின்றனர். குழந்தைகளுக்குள் அச்சம் தவிர, அவர்களின் நடவடிக்கைகளிலும் பல்வேறு மாற்றங்களை இந்த பொதுமுடக்க காலம் கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றனர். அதிகப்படியான கோபம், எரிச்சலுடன் காணப்படுவது, தூங்கும் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
மேலும் பள்ளிகள் இல்லாததே மாணவர்களுக்கு மன சோர்வை உண்டாக்கியிருப்பதாகவும், வெளியில் எங்கும் சென்று விளையாட முடியாத சூழல் அவர்களுக்கு மன அழுத்தத்தத்தை தருவதாகவும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் குழந்தைகளுக்கு பெரிதாக நோயைப் பற்றிய புரிதல் இருக்காது என்பதால் அவர்களுடன் மனம்விட்டு பேசுவதும் இறப்புச் செய்திகளை பற்றி அவர்கள் முன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் அச்சத்தைப் போக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.