கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 50 விழுக்காடு ஊதியத்தை அவர்களது வங்கி கணக்கில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்போக்குவரத்து, சுற்றுலா, சிறுகுறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் விமானப் போக்குவரத்து, ஹோட்டல், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 50 விழுக்காடு ஊதியத்தை வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் வேலையை இழந்தவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் உதவித்தொகையை வழங்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல சோப்பு உள்ளிட்ட தூய்மைப் பொருட்களின் விலையை 15 சதவிகிதம் வரை குறைக்கவுள்ளதாக நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க கிருமி நாசினி, சோப்பு, தரை துடைக்கும் திரவங்கள் உள்ளிட்ட தூய்மைப் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் இந்த பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட், கோத்ரெஜ், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சோப்பு மற்றும் இதர தூய்மைப் பொருட்களின் விலையை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன. மேலும், இந்தப் பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாகவும் கூறியுள்ளன.