கடந்த 5 மாதங்களில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 2008 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஒன்றரை வருடமாக நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. முதல் அலை தாக்கம் முடிந்து இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து சற்றே ஓய்ந்திருக்கிறோம் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தியாவில் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட பரவலாக மழை பெய்துவருகிறது. பருவநிலை மாற்றத்திற்கேற்ப டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்களின் தாக்கமும் அவ்வப்போது அதிகரிக்கும்.
ஆனால் தற்போது இருக்கும் பெருந்தொற்றுக் காலத்தில் அவற்றைக் கண்டறிந்து மக்களை காப்பது சவாலாகவே இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவத்துறை அதிகாரிகள். காரணம் மலேரியா, டெங்கு போன்றவற்றுக்கும் கொரோனாவுக்கும் அறிகுறிகள் ஒன்றுபோல் இருப்பதே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக காய்ச்சல், தலைசுற்றல், தலைவலி, உடல்வலி ஆகியவை ஏற்படுவதால் மக்களும் இந்நேரத்தில் குழப்பமடைவதாக தெரிவிக்கின்றனர்.
டெங்கு காய்ச்சல் DENV என்ற வைரஸால் ஏற்படுகிறது. மேலும் ஏடிஸ், ஏஜிப்டி என்கிற கொசுக்களால் பரவக்கூடியவை. லத்தீன் அமெரிக்கா, ஆசிய நாடுகளில் அதிகம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சலானது சராசரியாக 10 கோடி முதல் 40 கோடி மக்களை ஆண்டுதோறும் பாதிப்பதாக எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு.
டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கண்டறிவதற்கு ரத்தப் பரிசோதனை செய்வது அவசியமாகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ உள்கட்டமைப்பு வசதி, மனித ஆற்றல், பரிசோதனைக் கூடங்கள் ஆகியவை முறையாக வழிமுறைப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் எனக் கூறுகின்றனர் டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த தொற்றுநோய்த்துறை மருத்துவர்கள்.
பருவ மழைக்காலத்தில் இந்நோய்களின் தொற்று அதிகரிக்கும் என்பதால் அரசும் மருத்துவத்துறையும் இணைந்து நோய்களை பரவாமல் தடுக்க ஆயத்தப் பணிகளை செய்திட வேண்டும் என்கின்றனர். அத்துடன் மக்களும் பொறுப்புணர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு செயல்படுவதும் அவசியம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.