கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமலாக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை எனவும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இரண்டாவது நாளாக அவர் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.