கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். உணவு சாப்பிடும்போது மாரடைப்பு ஏற்பட்டு நோயாளி உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயிரிழந்தார். ராஜாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி கதறி அழுதார். ஆபத்தான நிலையில் வந்த மற்றொரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ராஜாவுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் குழாயை, மருத்துவர் அகற்றியதாகவும், தான் எவ்வளவோ தடுத்தும் தன்னை தள்ளிவிட்டு மருத்துவர் ஆக்சிஜன் குழாயை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ராஜாவின் மனைவி குற்றம்சாட்டினார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், 80 சதவீதம் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ராஜாவுக்கு கடந்த 15 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறினார். உணவு சாப்பிடும்போது ஆக்சிஜன் இயந்திரம் புதிதாக மாற்றப்பட்டதாகவும், அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.