இனி 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
15 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் குழுவினருடன் சுகாதாரத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், 15ஆக உள்ள வயது வரம்பை12 வயதாக குறைத்து பணிகளை தடுப்பூசி பணியை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்த கூடுதல் தடுப்பூசி, இனி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா தடுப்பூசியான கார்பேவாக்ஸ் (Corbevax) சிறார்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.