கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கிவருகிறது. சிலருக்கு இருமல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருகிறது. சிலருக்கு சுவை, வாசனை தன்மைகளை இழக்கச் செய்தல் போன்ற அறிகுறிகளுடன் வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெரும்பாலான அறிகுறிகள் எதுவும் இல்லாமலே வருகிறது. கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் தாக்குகிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் இறந்துகொண்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இவை உயிரியல் காரணங்கள் முதல் மோசமான பழக்கவழக்கங்கள்வரை எந்த காரணங்களாலும் ஏற்படலாம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொரோனா சமமாக பரவுவதாக சமீபத்தில் வெளிவரும் ஆய்வுகள் காட்டினாலும், ஆண்களிடம் ஏற்படும் நோயின் தீவிரம் நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஆண்கள் அதிகளவில் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் அதிகமாக புகைப்பிடிப்பது கொரோனா நோயின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் அறிகுறிகளை, வழிகாட்டுதல்களைப் புறக்கணிப்பது என அலட்சியமாக இருக்கிறார்கள். ஆண்களைவிட பெண்கள் வலுவான நோயெதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இறப்பில் 63 சதவீதம் பேர் ஆண்கள். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 65 சதவீதம் ஆண்கள், 35 சதவீதம் பெண்கள். மருத்துவரீதியாக பல்வேறு கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டாலும், இதன் வெளிப்படையாக காரணம் தெரியவில்லை.
இதுபற்றி விளக்கம் தெரிந்துகொள்ள டைம்ஸ்நௌ பத்திரிகை மும்பை ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலுண்டின் க்ரிடிக்கல் கேர் இயக்குநர் டாக்டர் ராகுல் பண்டித்திடம் பேசியுள்ளனர்.
ஆஞ்சியோ டென்சிம்- 2 (ஏ.சி.இ) ஏற்பி, ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டிரோஜென் ஆகியவற்றை மாற்றும் மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் கொரோனா வைரஸானது நோயெதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அவர்.
ஏ.சி.இ ஏற்பிகளுக்கான இணைப்பு
சார்ஸ் கோவிட் 2, சார்ஸ், மெர்ஸ் போன்ற கொரோனா வைரஸ்களில் உள்ள 'ஸ்பைக் புரதம்' ஏ.சி.இ உடன் ஒரு உறவைக் கொண்டுள்ளது என்பது இப்போது தெளிவாக தெரியவந்துள்ளது. ஏ.சி.இ 2 ஏற்பிகள் இந்த வைரஸ்களுக்கான நுழைவாயிலாக உள்ளது. பெண்களுடன் ஒப்பிடும்போது ஏ.சி.இ 2 ஏற்பிகளின் செறிவு ஆண்களில் ஏராளமாக உள்ளது. அவை நுரையீரல், இதயம், குடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன்களின் இணைப்பைப் புரிந்துகொள்வது அவசியம்
பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ளது. பெண்களுக்கு இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோயெதிர்ப்பு சக்தியை விரைவாகத் தூண்டுகிறது மற்றும் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பெருக்கத்தையும் தடுக்கிறது. இதுவே ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன், உடலின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தடுக்கிறது. எனவே, அவர்களுக்கு கடுமையான தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஈஸ்ட்ரோஜனின் இந்த தன்மை கொரோனாவில் மட்டுமல்ல, இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற வைரஸ் நோய்களிலும் காணப்படுகிறது.
மரபணு முன்கணிப்பு
உடலில் ஒரு நோய்க்கிருமியை அடையாளம் கண்டுபிடித்து அதற்கான பதிலை கொடுப்பதற்குக் காரணமான மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் உள்ளன. பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால், அவை ஒரு நோய்க்கிருமிக்கு விரைவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதோடு சிறந்த பாதுகாப்பையும் வழங்குகின்றன. மறுபுறம், ஆண்களுடன் ஒப்பிடும்போது, ஈஸ்ட்ரோஜன் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு விரைவாக பதிலளிப்பதால் பெண்களுக்கு அதிக நோயெதிர்ப்பு பிரச்னைகள் வருகின்றன.
courtesy - timesnownews