5 ஆம் அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழகத்தில் கோவிட் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவத்துறையின் முன் தயாரிப்புகள் என்னென்ன ? ஆக்சிஜன் , படுக்கைகள் , மருந்துகளின் நிலை குறித்து விளக்குகிறது இத்தொகுப்பு.
கடந்த மார்ச் முதல் வாரத்தில் தினசரி தொற்று உறுதியாகும் எண்ணிக்கை 20 ஆக இருந்த தமிழகத்தில் தற்போது 270 ஐ தாண்டி தொற்று உறுதியாகி வருகிறது. இது 5 ஆம் அலை தான் என குறிப்பிடாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆக்சிஜன் :
இரண்டாம் அலையில் கடந்த 2021 மே மாதத்தில் ஆக்சிஜனுக்காக அல்லல் பட்ட போதே ஆக்சிஜன் சேமிப்பிற்கான கூடுதல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டதால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கே வேலை இல்லை என்கிறது மருத்துவத்துறை.
1. 24,061 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் உள்ளன.
2. 260 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
4. 2067 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை சேமிக்க தேவையான கொள்கலன்கள் பயன்பாட்டில் உள்ளன.
தமிழ்நாட்டின் தற்போதைய சராசரி மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடு ஒருநாளைக்கு சுமார் 75 மெட்ரிக் டன் க்கும் குறைவு தான் என்பதால் தேவைக்கும் அதிகமான ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக கூறுகிறது மருத்துவத்துறை.
இதைத்தவிர, தமிழக மருத்துவத் தேவைகளுக்காக ரூர்கேலா, டோல்வி, காலிங்க நகர் ஆகிய இடங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு கட்டமைப்பு இரண்டாம் அலை முன்னேற்பாடாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக,
அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 20 KL லிருந்து 60 KL ஆக உயர்த்தப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இந்த சேமிப்புத்திறன் இடத்திற்கு ஏற்றவாறு உயர்த்தப்பட்டது.
தலா 2 கோடி மருந்துகள் கையிருப்பு :
இது தவிர கோவிட் சிகிச்சைக்கான அத்தியாவசியமாக பாரசிட்டமால் மருந்துகள் , விட்டமின் மாத்திரைகள் ஆகியவை தலா 2 கோடிக்கும் மேல் கையிருப்பு உள்ளதாக கூறுகிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்.
ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் குப்பிகள் ,இம்யூனோகுளோபுலின் , ஆம்போடெரிசின் பி லிப்போசோமல் ஆகிய மருந்துகளை மத்திய அரசு கோவிட் சிகிச்சை Protocol ல் இருந்து நீக்கிவிட்டாலுமே கூட அந்த மருந்துகளும் தமிழ்நாடு மருந்துவப் பணிகள் கழகத்திடம் அத்தியாவசியத்திற்கான அளவு கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.
படுக்கைகள் :
தமிழகம் முழுவதும் 1,11,877 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
படுக்கைகளின் வகைகள்
ஆக்சிஜன் அல்லாத 22,820
ஆக்சிஜன் படுக்கைகள் 33,664
ஐசியூ 7797
கோவிட் .பராமரிப்பு . மையங்கள்: 36,475
கோவிட் இடைநிலை பராமரிப்பு மையங்கள் : 11,121
இவை தவிர சென்னையில் 531, தமிழகம் முழுவதும் 7017 என வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
6 மாதங்களுக்கு போதுமான முகக்கவசங்கள், பிபிஈ உடைகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கையிருப்பில் உள்ளதாகவும், பயன்பாட்டைப் பொறுத்து கூடுதலாக வாங்கப்பட்டு வருவதாகவும் தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது.