சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ராவின் தாஜ் நகரில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர், டிசம்பர் 23 ஆம் தேதி சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆக்ரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்...
"ஆண்டின் இறுதியில் பலர் வணிகத்திற்காக பயணம் செய்கிறார்கள், அவர்கள் திரும்பிய பிறகு கண்காணிக்கப்படுவார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிப்பதோடு, கண்காணிக்கப்பட்டும் வருகிறார். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உஷார் நிலையில் உள்ளது" என்றார்.