கோவையில் கல்லூரி ஒன்றில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கோவை மாவட்டத்தில் பால், மருந்தகம், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர, பிற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், அடுமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது என்றும், அதிலும் 50 விழுக்காடு கடைகள் மட்டுமே சுழற்சி முறையில் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தையில் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் வெளி மாவட்ட வாடிக்கையாளர்கள் சந்தைக்கு வராமல் இருப்பதை சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர் உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த 4 மாணவர்கள் மூலம், பிறருக்கும் தொற்று பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.