நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நிகழ உள்ளது. கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் பேச உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 3 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதற்கிடையில் நாடெங்கும் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தடுப்பூசி போடும் வேகம் மிகக் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, இப்படியே சென்றால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும் என கவலை தெரிவித்துள்ளது.
முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் 2ஆவது தவணை போட்டுக்கொள்ள தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான நிலைக்குழு தெரிவித்துள்ளது.