சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் இல்லாமல் சென்னை மக்கள் பொதுஇடங்களில் கூடுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஐஎம்சிஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், கோவிட்-19 வேகமாக பரவினால் அது அனைவரையும் திணறடிக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக இடைவெளி இல்லாமல், மாஸ்க் அணியாமல் சென்னை தி.நகர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிய செய்தியை பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதீப் கவுர். இதுபற்றி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “நம்பமுடியவில்லை! அன்புள்ள சென்னை குடிமக்களே தயவுசெய்து முகமூடிகளை அணிந்து, முடிந்தவரை வீட்டில் தங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு உதவுங்கள். கோவிட்-19 வேகமாக பரவுகிறது என்றால் ,அது உங்களுக்கு சேவை செய்யும் சுகாதார அமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரவு பகலாக உழைக்கும் அனைத்து முன்னணி தொழிலாளர்களையும் திணறடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று மருத்துவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.