கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டத்தில் முறைகேடு என எழுந்த சர்ச்சைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், 3 கட்ட பரிசோதனைகளிலும் ஒப்புதல் வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய சுகாதாரதுறை அமைச்சகம், இதுபோன்ற தகவல் அனைத்தும் வதந்தி என்றும், உண்மையில்லை என்றும், எந்த ஓரு அரசியல் அழுத்தத்தின் பேரில் கோவாக்சின் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை; அப்படி தகவல் வெளியாகியுள்ளது போலியான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால பயன்பாட்டு தடுப்பூசிக்கு என பல விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவாக்சின் உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அங்கீகாரம் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தேசிய கட்டுப்பாட்டாளரால் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலாவதியான 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் சமீபத்தில் அழிக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு மருந்துகள் 2 தவணையாகவும், பூஸ்டராகவும் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் காலாவதியாகிவிட்டதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்து இருந்தார்.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் அதிகம் செலுத்தப்பட்டன. இந்தியாவிலுள்ள 70 சதவீதம் பேர் குறைந்தது 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டுள்ளனர். மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் கடந்தாண்டு டிசம்பர் மாதமே கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் தெரிவித்துள்ளது. அதன்பின் 9 மாத ஆயுட்காலம் காலாவதியாகிவிட்டதால் 100 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் செப்டம்பரில் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.