பொதுவெளியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையானது 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனால் பெரும்பான்மையான இடங்களில் மக்கள் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
இந்நிலையில் கர்நாடகாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதமானது நகர்புறங்களில் 1000 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட இருப்பதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவானது முதல்வர் எடியூரப்பாவுடனான கலந்துரையாடலுக்கு பிறகு வரும் அமலுக்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பொது வெளியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் தொடர் அலட்சியத்தன்மையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அபராதமானது முகக் கவத்தை சரிவர அணியாதவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதமானது அந்தப்பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களின் வழியாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.