கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் தங்களது பெரும்பாலான கிளைகளின் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், வங்கி சேவை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கிராமப்பு றங்களில் வாழும் மக்கள் அனைவரும் மின்னணு முறையை பயன்படுத்தாமல், ரொக்கமாக பணத்தை கையாளுகிறார்கள் என்பதால் வங்கி இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை கருதி பெரும்பாலான கிளைகளில் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய நகரங்களில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வங்கியை இயக்கவும், கிராமங்களில் ஒரு நாள் இடைவெளி விட்டு வங்கி சேவை வழங்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னணு பண பரிவர்த்தனை பற்றி தெரியாத கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதே முதன்மையானது என்ற விதி இருப்பதால், அவர்கள் பாதிக்கப்படாத வகையில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஏற்படுத்தி வரும் பொருளாதார பாதிப்புகளை தனி நபர்களும் தொழில் நிறுவனங்களும் எதிர்கொள்ள சலுகைகளுடன் கூடிய அவசர கால கடன்களை வங்கிகள் அறிவித்து வருகின்றன.