கிருமி நாசினி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சானிடைசர்கள் தட்டுப்பாடு அதிகரித்ததால், உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருமிநாசினி தயாரிக்கத் தேவையான ஆல்கஹாலின் விலை ஏற்றத்தைத் தடுக்க, அதனை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் முகக்கவசம் மற்றும் சானிடைசர்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதனையடுத்து நேற்று பேசிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பை அலட்சியம் செய்யாமால் அரசு கூறும் நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.