கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு எதிரணுக்களை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, நோய் பாதிப்பில் இருப்பவருக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை ஆனது, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா பி.டி.ஐ.யிடம் கூறியதாவது: "பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து கண்டறிவதற்காக இரண்டு குழுக்களாக தலா 15 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவினருக்கு கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் பொதுவான சிகிச்சையும், மற்றொரு குழுவினருக்கு பிளாஸ்மா சிகிச்சையுடன், பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.
இதன் முடிவில், இரண்டு குழுக்களுக்கும் ஒரே அளவில் பெரிதளவில் மருத்துவப் பலன்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதேசமயம், பிளாஸ்மா சிகிச்சை முறையால் நோயாளிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்ல முடிகிறது. எனினும் ஆய்வு முடிவுகள் வெளிவரும்வரை இதனை நோயாளிகளுக்கு கவனமாகப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் பலன்கள் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தி வருகிறது. எனினும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.