அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்ய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளில், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தித்தொடர்பு செயலர் கெவின் இந்த செய்தியை தனது ட்விட்டர் வழியாக உறுதிசெய்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவலின்படி, `இந்த வார இறுதி முதல், அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணிப்பதற்கு கொரோனா பரிசோதனை செய்யும் வழிமுறை முடிவுக்கு வருகிறது. போக்குவரத்து துறையினரின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில், அனைத்து பயணிகளும் கடந்த 90 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது கொரோனா நெகடிவ் சான்றிதழை விமானத்தில் பயணிக்கும் முன் காட்ட வேண்டியிருக்கும்’ என்று தெரிகின்றது.
கெவின் மேலும் தெரிவித்துள்ள தகவலில், இந்த விமான போக்குவரத்துக்கான தளர்வானது, அதிபர் ஜோ பைடனின் தடுப்பூசி மற்றும் கொரோனா சிகிச்சைகளுக்கான பணிகளை சற்று கடுமையாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போதைக்கு இதை கையாள, அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் சார்பில் கொரோனா எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக கொரோனா அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், அமெரிக்காவில் கடந்த மாதம்தான் கொரோனா மரணம் ஒரு மில்லியனை தாண்டியது. அந்த அடிப்படையில் பார்க்கையில், அமெரிக்காவின் இந்த முடிவு, பேரிடர் நேரத்தில் எடுக்கப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது.