இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பரவும் விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 33,750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் இன்றைய நிலவரப்படி 1,700-ஐ கடந்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பரவல் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் மிகப்பெரிய பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இவற்றில் 84% ஒமைக்ரான் வழக்குகள் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியை பொருத்தமட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 4,000-த்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில், கொரோனா பரவல் விகிதம் 6.5 ஆக உள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் 11,877 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 510 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தமட்டில் மும்பையில் பாதிப்பு என்பது கடுமையாக அதிகரித்து வருகிறது. இதே போன்று மேற்கு வங்கம், தமிழ்நாடு, கோவா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்துவரும் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி உள்ளன. அரியானா மாநிலத்தை பொருத்தமட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் பரவல்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
ஒமைக்ரான் டெல்டாவை விட 3 மடங்கு அதிகமாக பரவிநாளும் தடுப்பூசி காரணமாக உயிர் பலி குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 639 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1061 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில் 60 வயதைக்கடந்த முதியவர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற 10-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒமைக்ரான் பரவல் தற்போது நாட்டில் அதிகரித்துள்ளதால் இந்நேரத்தில் மத்திய-மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் தான் மிக முக்கியமானது