மத்திய அரசின் உத்தரவையடுத்து எம்பிபிஎஸ் 3 மற்றும் 4ஆம் ஆண்டு பயிலும் 7,000 மாணவர்கள் மருத்துவமனைகளில் தமிழகத்தில் கொரோனா பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எம்பிபிஎஸ் 3 மற்றும் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களை உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு முடித்த மருத்துவ மாணவர்களை கோவிட் பணிக்கு அமர்த்த அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி, இம்மருத்துவ மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட் நோயாளிகளுக்கு வீடியோ கால் அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனைகள் வழங்கவும்,.மருத்துவமனைகளில் கோவிட் பணிகளை ஒருங்கிணைத்தல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதன் மூலம் இப்பணிகளில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க முடியும். இம்மாணவர்கள் 7000 பேரும் கோவிட் வார்டுகளுக்குள் நேரடியாக பணியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.