தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் வாரத்திலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கையானது தினசரி 20 பேர் என உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கையானது 500-ஐ தொட்டுள்ளது. அதேநேரம், தினசரி 300க்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்தும் வருகின்றனர்.
இன்று வெளியாகியுள்ள அறிக்கையின்படி, ‘கோவிட் தொற்றினால் தனிமைப்படுத்தலில் இருப்போரின் எண்ணிக்கை 3048 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 பேர் ஆக்சிஜன் படுக்கைகளிலும், 81 பேர் ஆக்சிஜன் அல்லாத சாதாரண படுக்கைகளிலும் உள்ளனர். 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிகிறது. முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, வெறும் 19 பேர் மட்டுமே ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 3000-லிருந்து 5800-க்கு மேல் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
அறிக்கை வழியே, தமிழ்நாட்டின் தற்போதைய தொற்று உறுதியாகும் சதவீதம் 8.5% ஆக உள்ளதும் தெரிகிறது. இதில் மாவட்டங்கள் நிலவரப்படி செங்கல்பட்டில் 11.5%, கன்னியாகுமரியில் 11.4%, கோவையில் 11.2%, திருவள்ளூரில் 10.5%, சென்னையில் 10.2% என தொற்று உறுதியாகும் சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்றுடன் இம்மாதத்தில் 70 முதல் 90 வயதுக்குட்பட்ட இணைநோய்களுடன் இருந்த 5 கொரோனா உறுதியான முதியவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.